‘ஊழல்’ என்பது மனிதனின் பொய்யிலிருந்து உருவானது தான். இங்கு ‘பொய்’ என்ற ஒன்றே கிடையாது. வெறுமனே உண்மையை மறைப்பதிலிருந்து தான், ‘பொய்’ என்ற ஒன்று உருவானது. வெளிச்சம் நிறைந்த இப்பிரபஞ்சத்தில், ‘இருள்’ எவ்வாறு உருவானதோ, அவ்வாறுதான் ‘பொய்’ என்ற ஒன்றும் உருவானது.
‘இருளும், பொய்யும்’ நிதர்சத்தில் கிடையவே கிடையாது. இங்கு ‘வெளிச்சமும், உண்மையும்’ தான் நிதர்சனம். ‘ஹென்றி வூகன்’ (Henry Vaughan) அவர்கள், தன் கவிதை ஒன்றின் வழியாக, ‘ஊழல்’ என்றால் என்ன?! என்பதை வரையறுத்திருப்பார்.
ஏதேன் தோட்டத்திலிருந்து, ஆதாம் வெளியேற்றப்பட்டதிலிருந்து தான், ‘ஊழல்’ என்ற ஒன்றே உருவானது. கடவுளிடம் ஆதாம், யதார்த்தத்தை மறைக்க முயற்சிக்கிறார். அந்த இடத்தில் ‘பொய்’ மட்டும் தான் உருவானது, ஆனால் கடவுளின் சாபத்தை ஏற்றுக்கொண்டு ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேறும்போது தான், ‘ஊழல்’ உருவாகிறது.
‘தன்னை சபிக்கப்பட்டவனாக எண்ணி’ வருந்துகிறானோ இல்லையோ?! ‘தன்னை ஆசிர்வதிக்கப்பட்டவனாக அறிவின்பால் நின்றுகொண்டு’ சமாதானம் தேடிக்கொள்கிறான். இங்கு தான் ‘ஊழல்’ உருவாகிறது. தான் செய்ததை ஞாயப்படுத்தும் இடத்தில் தான் ‘ஊழல்’ உருவாகிறது.
மேற்கொண்டு ‘ஹென்றி வூகன்’ அவர்களின் கவிதையை சற்று உற்று நோக்குவோம்.
‘அவனின் ஊழல் குணமானது, அனைத்து கற்களிலும், நிலங்களிலும் இருப்பதில்லை’. ஏனெனில், அவனின் முந்தைய தெய்வ மகிமை இன்னுமும், அவனிடத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறது’ என்கிறார்.
அதாவது, ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேறிய ஆதாம், மனித குலத்திற்கு மிகப்பெரிய சாபத்தை பெற்றுத் தந்துள்ளார். ஆதாமின் வாழ்க்கை ‘முட்கள் மற்றும் களைகள்’ நிறைந்தது. ஆனால், அந்த ‘களைகள்’ யாவும் நிரந்தரமானது கிடையாது. அவை எளிதில் மறைந்துவிடக் கூடிய ஒன்றுதான்.
எனவே, அவன் எல்லா நேரங்களிலும் ஊழல் நிறைந்தவனாக இருப்பதில்லை.
ஆனால், அவனை அவனே பலி சுமத்திக் கொள்கிறான். ‘தான் ஒரு சபிக்கப்பட்டவன் என்றும், தன்னால் மீளவே முடியாது என்றும்’ தனக்கு தானே தண்டனை இட்டுக் கொள்கிறான். அவனால் இக்கணமே சொர்கத்தை உணர முடியும். மலைகளிலும், பள்ளத்தாக்குகளிலும், இன்னபிற இயற்கை வளங்களின் உதவியுடனும் சொர்க்கத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்!
‘ஆனால், அவன் உறைந்து போய் உட்கார்ந்துவிட்டான்’. அவன் உருவாக்க நினைத்த சொர்க்கம் இப்பொழுது கலை இழந்து காணப்படுகிறது. அதன் வானவில்லின் வண்ணங்கள் வெளுத்துவிட்டன. தன்னை தானே பலி சுமத்திக் கொள்ளும் அவனின் தண்டனையில், சிறிதளவு அகம்பாவம் உள்ளது. அது அறிவின்பால் அவன் கொண்ட பற்றால் உருவான ஒன்று.
‘ஹென்றி வூகன்’ அவர்கள் ஒரு ‘மீமெய்யியல்’ தத்துவார்க்கவாதி. ‘ஊழல்’ பற்றிய அவரின், இந்த கவிதை மிகவும் பிரசித்தி பெற்றது.
‘Fruit of Paradise’ (1970) படத்தை நீங்கள் கண்டிருக்க கூடும். ‘நவீனத்துவம் நிறைந்த ஆதாம் ஏவால்’ கதை தான் இப்படம். ‘செக்கோஸ்லோவாக்கியா’ -வின் புதிய அலை சினிமாக்களுள் ஒன்று. ‘அறிவு பழத்தினை தின்றுவிட்ட ஏவால்.. சர்ப்பத்தின் மீதே ஆசை கொள்வாள்’. இந்த இடத்தில் ‘சர்ப்பம்’ என்பது ஒரு ஆணின் வடிவத்தில் வந்து நிற்கும்.
படத்தின் கருவே, ‘ஊழல்’ பற்றியது தான். அதாவது, சர்ப்பத்தின் மீது ஆசைகொள்ளும் ‘ஏவால்’,
1. சர்ப்பத்தை அடைந்துவிட வேண்டும் (அறிவுக்கு மயங்கி அடிபணிய வேண்டும் )
(அ)
2. சர்ப்பத்தின் மீதனான தன்னுடைய நாட்டத்தில், ‘தன்னை தானே அறிந்து கொள்ள வேண்டும்’… (தான் விரும்புவது ஒரு மாயை என்கிற கோணத்தில்.)
‘செக்கோஸ்லோவாக்கியா’ -வின் அன்றைய அரசியல் சூழலை அப்படியே ‘மீமெய்யியல்’ கோட்பாடுகளுடன் இணைத்து, மாற்று சினிமா-வை இயக்குநர் கொடுத்திருப்பார். அன்றைய கம்யூனிச அரசாங்கத்தின் ‘ஊழல்’ பேர்வழிகளையும், கட்டுபாடுகளுக்கு மத்தியில் காலம் தள்ளும் பொதுமக்களையும்,, அப்படியே திரைப்படத்தில் உவமைபடுத்தியிருப்பார்.
‘ஹென்றி வூகன்’ அவர்களின் ‘ஊழல்’ கவிதைக்கு, இப்படமே சரியான சான்றாக இருக்குமென கருதுகிறேன்… ஆகவே, எதையும் பிரித்தறிந்து பகுக்கும் மனிதன், ஊழலையும் சரியாக நியாயப்படுத்த கற்றுக் கொண்டான். அதற்கான அழகான வர்ணனைகளை ‘ஜோடிக்க’ கற்றுக் கொண்டுவிட்டான். அக்கருத்தினை முன்மொழியும் ஒரு அபாரமான படம் ஒன்றினை இப்பதிவில் காண்போம்.
Beautiful Corruption (2018)
மால்டோவா (Moldova) நாட்டு திரைப்படமான, இப்படத்தின் ஒரே ஒரு காட்சியை விவரிப்பதன் மூலம், இப்படத்தின் மொத்த பொதின்மையை கடத்தமுடியுமென கருதுகிறேன்.
காவல்நிலையத்தை அணுகும் ஒரு சாமனியன். தனக்கான நீதியை கேட்டு நின்றுகொண்டிருக்கிறான். காவலர் அவனிடத்தில் இவ்வாறு கூறுகிறார்.
“நீ பச்ச மண்ணாக இருக்கிறாய்.
‘அதோ அந்த பூவை பாரு?! அது ஒரு சின்ன செடி தான். ஆனால், அதில் நிறைய அர்த்தங்கள் அடங்கியிருக்கிறது.’
இதை ‘கிராசுலா’ என்று அழைப்பர். இது பற்றி கேள்விபட்டருக்கிறாயா?
‘எனக்கு தெரியும். நீ படிப்பில் கொஞ்சம் மந்தம் என்று. நீ கேள்விபட்டிருக்கமாட்டாய்’
மக்கள் இதை ‘பண மரம்’ என்று அழைப்பர். ஏனெனில், ‘இது வீட்டிற்கு பணத்தை கொண்டு வரும்’ என்று மக்கள் நம்பி வளர்க்கின்றனர்.
‘இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த செடிக்கு நிறைய தண்ணீர் ஊற்ற தேவையில்லை. கொஞ்சமாக ஊற்றினால் போதும். ஆனால், அடிக்கடி ஊற்ற வேண்டும்’. உனக்கு புரிகிறதா?
நாளைக்கு இதே நேரத்திற்கு வந்துவிடு. என்னோட மரத்திற்கு நீ தண்ணீர் ஊற்ற வேண்டும் !
அந்த காவலர், ‘தனக்கு லஞ்சம் வேண்டுமென கேட்கமாட்டார். அதே நேரத்தில் தான் ஒரு கட்டுகோப்பான அதிகாரியாக காட்டிக் கொள்வார்.
தான் கேட்பதை, நவ நாகரீகமாக ‘அழுத்தம் திருத்தமாக’ உவமை காட்டி வலியுறுத்துவார். எவ்வளவு அழகான ஒரு ஊழல் பாருங்கள்.!
படத்தின் கதை:
‘ஆண்ட்ரி’ வேலைவாய்ப்பற்ற இளைஞன். தான் படித்த படிப்பிற்கான வேலையை தேடி, அன்றாடம் பல நிறுவனங்களின் வாசற்படியை மிதிக்கிறான். ‘எல்லா இடத்திலும் இலஞ்சம் கொடுத்தால் மட்டுமே, வேலைக்கு சேரமுடியும்’ என்கிற நிபந்தனை.
அவ்வப்போது, உள்ளூரில் ‘வாகனம் கழுவும்’ வேலையை செய்து வருகிறான். உடல்நிலை சரியில்லாத தாயார். அவருக்கான மருத்துவ செலவு, தன் எதிர்காலத்திற்காய் சேர்த்துவைக்கும் சொற்ப ஊதியம்! இப்படியே நாட்கள் நகர்கிறது.
ஒருநாள், தன் தாயாரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில், குடிபோதையில் வந்த ஒருவரின் கார் மோதிவிட விபத்து ஏற்ப்படுகிறது. மருத்துவமனையில் கண் விழிக்கும் ‘ஆண்ட்ரி’, தன் தாயார் கோமா-வில் இருப்பதை அறிந்து கொள்கிறான். தனக்கான நீதியை வழங்கக் கோரி காவல் நிலையத்தை நாடுகிறான். ஏற்கனவே, காவல்துறையினருக்கு அந்த குடிகாரன் லஞ்சம் கொடுத்துவிட்டான். ‘நீதி கிடைக்குமென சட்ட ரீதியாகவும், நேர்மையாகவும் அவன் அழைந்த்து’ தான் மிச்சம்.
‘எங்கும் ஊழல், எதலும் ஊழல்.. ஆனால் அவ்வளவு நவ நாகரீகமாக அழகான ஜோடனையுடன் நடக்கிறது.
இதே படம் நம்மூரில் எடுக்கப்பட்டிருந்தால், யதார்த்தை மீறி ‘ஹீரோயிசம்’ மேலோங்கியிருக்கும். ஆனால் இந்த படத்திலோ, யதார்த்தத்தை எல்லளவும் மீறாமல் அபாரமாக காட்டியிருப்பர். மால்டோவா-வில் கம்யூனிச சித்தாந்த ஊழல் இன்னும் அங்கு மண்டி கிடப்பதை, இயக்குநர் தன் படத்தின் வழியாக கடத்தியிருக்கிறார்.
மால்டோவா-வில் திரைத்துறைக்கு, எவ்வித நிதி உதவியும் அளிக்கப்படுவது கிடையாது. அநேக நேரங்களில், ‘Crowdfunding’ முறையில் தான், திரைப்படங்கள் உருவாக்கப்படுகிறது. அதிலும் பெரும்பாலனவர்கள் ஈடுபாடு காட்டுவது கிடையாது. ஏனெனில், திரைப்படங்களை எடுத்தாலும், திரைப்பனங்களை காண மக்கள் ஆர்வம் காட்டுவது கிடையாது. எனவே பிரயோஜனமற்ற செயல் என புறந்தள்ளிவிடுகின்றனர். ஒருசிலர் தனியொரு ஆளாக நின்று, திரைப்படங்களுக்கு நிதியுதவி அளித்தாலும், அவரின் கருத்துகளுக்கு உடன்பட்டே திரைக்கதை அமைய வேண்டுமென்பது கட்டாயம்.
ஆக, அமேரிக்க ஐரோப்பிய நிறுவனங்கள் அவ்வப்போது, ‘மால்டோவா’ படங்களுக்கு நிதி உதவி அளிப்பது வழக்கம். அந்தவகையில் ‘Beautiful Corruption’ என்ற இப்பத்தை, இயக்குநர் ‘Eugen Damaschin’ அவர்கள் எடுத்திருக்கிறார். தன் நாட்டில் தலைவிரித்தாடும் ஊழலை அக்குவேர் ஆணிவேராக காட்டியுள்ளார். இயல்பையும், யதார்த்தத்தையும் சிறிதளவுகூட மீறாமல்.
இயக்குநர், ‘Milk Film’ என்கிற இணைய தளம் ஆரம்பித்து, அதன் மூலம் தன் நாட்டு படங்களை, மக்களுக்கு அறிமுகபடுத்த எண்ணினார். அது சற்றே சிறிதளவு வெற்றியையும் கொடுத்திருக்கிறது. தற்கால மால்டோவா நடிகர்களின் வளர்ச்சியை காட்டிலும், பார்வையாளர்களின் வளர்ச்சி மிகமிக குறைவு தான்.
‘ஊழலை பற்றி மக்கள் யாரும் பேசுவதில்லை. மக்களை பொறுத்தமட்டில், ‘ஒரு பெந்தொகை களவாடப்பட்டு இருந்தால் மட்டுமே’ ஊழல் என்கின்றனர். ஆனால் ஊழல் என்பது அதுவல்ல. ‘உண்மையை மறைக்கும் எல்லாச் செய்கையும்’ ஊழல் தான். இதில் பெரிது, சிறிதென்றெல்லாம் கிடையாது. ‘மால்டோவா’ நிதி வங்கி ஒன்றில், மக்கள் தங்களின் பணத்தை இழந்துவிட்டனர்.
வங்கி சார்பாக பணம் திருட்டுபோய் விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் மொத்த வருவாயில் முக்கால்வாசி தொகை அது. ஆனால், சுலபமாக திருட்டிபோய் விட்டதாக, வங்கி கூறிவிட்டது. மக்களும் அதனை எதிர்த்து போராட்டம் செய்ய ஆரம்பித்தனர். ‘இங்கு பாதிக்கப்பட்டவர் மட்டுமே, ஊழலுக்கு எதிராக போரட வேண்டும் (அ) பெரிய ஊழலுக்கு மட்டுமே கொடி தூக்க வேண்டுமென்பதெல்லாம் கிடையாது.
ஊழல் என்றால், அது அளவுகளை பொறுத்ததல்ல. அனைத்து ஊழல்களும் கண்டிக்கப்பட வேண்டியது தான். ‘ஏதாவது ஒரு விடையத்தில் ஊழலால் பாதிக்கப்படும் நீங்கள், ‘அலச்சியத்தால் சகிப்புதன்மையுடன்’ நடந்துகொள்வீர்களா? கேள்வி கேட்கமாட்டீர்கள்?!
ஆக, என்னுடைய படம், ‘ஊழல் பற்றிய மக்களின் அறியாமையையும், குறுட்டுதனமான சகிப்பு தன்மையையும்’ விரிவாக விவரிக்கின்றது, என்கிறார் இயக்குநர்.
‘ஹென்றி வூகன்’ அவர்களின் கவிதையை போல, இங்கு ‘ஊழல்’ என்பது எப்போதுமே நிறைந்திருக்கும் ‘களை’ கிடையாது. அது மறைய கூடிய ஒன்று தான். ஆனால், மனிதர்கள் ‘தன் அறிவின்பால் பற்றுகொண்டு, சமாதானம் தேடிக்கொள்கின்றனர். நியாயப்படுத்து முயற்சிக்கின்றனர்.’
ஒரு அபாரமான படம் ஒன்றை, காண எண்ணினால், இப்படம் உங்களுக்கானதே.!
Movie Details:
Name: Beautiful Corruption
Year: 2018
Runtime: 108 mins
Genres: Drama
Language: Romanian
Country: Moldova
Director: Eugen Damaschin


0 Comments