Flocks - 3 Countries  3 Documentaries

உலகம் முழுக்கவே புராணங்களிலும், மாயக்கதைகளிலும், “ஆடு வளர்ப்பு” தெய்வீகமாகவும், நாகரீகமானதாகவும் கருதப்பட்டது. அவ்வப்போது மனித மாந்தர்களும் தங்களை, ஆட்டு மந்தைகளோடு ஒப்பிட்டு, புத்தி ஜீவனம் கற்றுக் கொண்டுள்ளனர்.

ஆடு வளர்ப்பு என்பது, வெறுமனே லாப நோக்கத்திற்காக நடத்தப்படும், வருமான தொழில் கிடையாது. அது, பண்டைய மனிதனின் நாகரீக சீரமைப்பிற்கான அஸ்திவாரம். கால்நடை பராமரிப்பு, தற்காலத்தில் அநாகரீகமாகவும், கவர்ச்சியற்றதாகவும் கருதப்படுகிறது.

நவீனம் புகுந்து, அடி ஆழம் வரை ஆட்டிப்பார்க்கும், இன்றைய காலகட்டத்திலும் கூட ‘ஆடு மேய்ப்பதை’ கௌரவமாக கருதும் மக்கள் இருந்து வருகின்றனர். அதுவும் நாகரீகத்தில் நன்கு வளர்ச்சிபெற்ற நாடுகளிலும் கூட. ஆடு வளர்ப்பதை, தெய்வீகமாகவும், காதல் உணர்வுடன் காலங்காலமாக (பரம்பரையாக) செய்துவரும், நவீன உலகின் மேய்ப்பர்களை, இப்பதிவில் காணவிருக்கிறோம்.

3 நாடுகளை சார்ந்த 3 ஆவணப்படங்களின் (Dacu-Drama) வாயிலாக, அவர்களின் ‘பக்தியையும், காதலையும்’ அறிந்துகொள்ள விருக்கிறோம்.

The Living Fire (2015)

கார்பாத்தியன் மலைத்தொடர் (The Carpathian Mountains) எட்டு நாடுகளில் பரந்துவிரிந்திருக்கும் மலைத்தொடர் ஆகும். உக்ரைனிற்கும், போலந்திற்கும் இடைப்பட்ட ‘கார்பாத்தியன்’ மலையில் தான், நாம் சந்திக்கவிருக்கும் குடும்பம் வாழ்கிறது. மூன்று தலைமுறைக்கு மேலாக, ஆட்டு மந்தைகளை வளர்த்துவரும் அவர்கள், நவீனத்தின் பிடியிலிருந்து விலகி வாழ்ந்து வருகின்றனர்.

நாளுக்கு நாள்,மலையின் பரந்த நிலப்பரப்பில் முன்னேறிக் கொண்டே இருக்கின்றனர். 4 வருடங்கள் அவர்களுடனான பயணத்தில், இணைந்து பெற்ற ஆவணப்படமே இது. கார்பாத்தியன் மலையில் 5 முதல் 6 மாதங்கள் பனிப்பொழிவு அதிகமிருக்கும். எனவே, மேய்ச்சல் நிலங்கள் குறைவுற்று, கால்நடைகளை ஒரே இடத்தில் பராமரிக்கும் நிலை 6 மாதங்களுக்கு நீட்டிக்கிறது.

படத்தில் மூன்று தலைமுறையை சார்ந்த ஒரே குடும்ப நபர்களின் (தாத்தா, மகன், பேரன்) அன்றாட வாழ்வு மற்றும் பயணங்கள் காட்சிபடுத்தப்படுகின்றன. ஏற்கனவே, ரோமானியாவில் வசிக்கும் ஆடுமேப்பாளர்களுக்கு ஒரு சட்டம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆடுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் சட்டம்.

கம்யூனிச ஆட்சி முடிவுற்று, செழித்தோங்கும் சமகால குடியாட்சிகள் யாவும், எளிய மக்களுக்கு எதிராகவே உள்ளது. அது, கார்பாத்தியன் கால்நடையாளர்களையும் விட்டுவைக்கவில்லை. தற்காலத்தில் காலத்தில், பழமைவாய்ந்த இத்தொழிலைவிட்டு விழகும் நிர்பந்தம், இளம் தலைமுறையினருக்கு உருவாகியுள்ளது. எனவே, அவர்களின் சிந்தனையை கட்டுபடுத்தும் எண்ணத்திலும், ஆடு வளர்ப்பை அடுத்த தலைமுறை போற்றும் வகையிலும், ‘புராதானமான மத சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம்’ அளிக்கின்றனர்.

6 மாத அடர்பனிகாலம் முடுவுற்று, சூடான இளந்தளிர் காலம் தொடங்கியுள்ளது. தங்களின் புனித சடங்கிற்காக, ஒரு நீண்டதூர பயணத்திற்கு ஆயத்தமாகின்றனர். அவர்களின் புனித பயணத்திற்கு, ஆயிரதெட்டு அர்த்தங்கள் உண்டு.

Movie Details

Name: The Living Fire

Original Name: Zhyva Vatra

Year: 2015

Runtime: 77 mins

Language: Ukrainian

Country: Ukraine

Director: Ostap Kostyuk

The Last Shepherd (2012)

அன்றொருநாள் வாரத்தின் இறுதிநாளான சனிக்கிழமை மாலைநேரம். சுறுசுறுப்பாக காணப்படும், அதிநவீன மிலன் நகரின் ‘Piazza del Duomo’ திடீரென்று ஆச்சர்ய வெள்ளத்தில் மூழ்குகிறது. ஏனெனில், ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் மொத்தமாக 700 ஆடுகள் குவிந்திருந்தன.

அச்சம்பவம் நாடு முழுவதிலும் அன்றைய நாளின் தலைப்புச் செய்தியாகி போனது. பத்திரிக்கைகளும், தொலைகாட்சிகளும் தங்களின் செய்திகளுக்காய் பரபரத்தன. ‘ரெனாட்டோ ஜூசெல்லி’ (Renato Zucchelli) என்ற சாதாரணமான ஆடுமேப்பவரின், விபரீதமான செயல்பாடு அது.

‘ரெனாட்டோ’ 45 வயதான, ஆடு மேய்ப்பவர். சிறுவயதிலிருந்தே, அத்தொழிலின் மீது தெய்வீக நம்பிக்கை கொண்டுள்ளார். அதிவேகமாக வளர்ச்சிபெறும் உலகின் புராதானமான நகரங்களுள் ,’மிலன் (Milan, Italy) நகரமும் ஒன்று.

பண்டைய காலத்தில் கலை மற்றும் பண்பாட்டு தலமாக கருதப்பட்ன இது, தற்காலத்தில் நவீனத்தின் போர்வையால் மூடப்பட்டுள்ளது. ஒருகாலத்தில் இதே நகரில், கால்நடைகளை வளர்த்துவந்த யாவரும், தற்போது அத்தொழிலிலிருந்து விலகி வந்துவிட்டனர்.

காரணம், அதிநவீன நகர வளர்ச்சியானது, மேய்ச்சல் நிலங்களை ஆக்கிரமித்துள்ளது. எங்குபார்த்தாலும், காங்கிரீட் தளங்களே பரவிவிட்ட ‘மிலன்’ நகரில், பசும் புல்வெளிகளை காண்பது அரிது. கூடவே, அவ்வளவுபெரிய நகரத்தில், ஒரே இடத்தில் கால்நனை வளர்ப்பு என்பது சாத்தியமற்றது. ஆனால், ‘ரெனாட்டோ’ அவர்களோ, தான் நேசித்த ஆடுமேய்க்கும் தொழிலினை விட்டுவிடவில்லை. அவருக்கு 4 குழந்தைகள் உண்டு. மனைவியும் அவரின் ஆர்வத்திற்கு உறுதுணையாக உள்ளார்.

‘ரெனாட்டோ’ ஆடுகளின் மேய்ச்சலுக்காக, நகரத்தைவிட்டு வெகுதூரம் செல்லவேண்டியிருக்கிறது. அருகிலுள்ள ‘ஆல்ப்ஸ்’ மலைத்தொடரில் தன் ஆடுகளுக்கான மேய்ச்சல் அதிகமுண்டு. வாரம் ஒருமுறை தன் கால்நடைகளோடு வந்து, குடும்பத்தினரை சந்திக்கிறார் ‘ரெனாட்னோ’ ! அவர் இல்லாத நேரங்களில், 4 பிள்ளைகளையும் மனைவியே பராமரித்து வருகிறார்.

‘ரெனாட்டோ’ அவர்களுக்கு, ஒரு விபரீத கனவு இருந்து வருகிறது. அதாவது, பரபரப்பான ‘மிலன்’ நகரம் முழுவதிலும் தன் ஆடுகளை காட்சிப்படுத்த வேண்டும் என்று! காரணம், தற்கால சமூகம் இயற்கையைவிட்டு வெகுதூரம் சென்றாயிற்று.

நான்கு சுவர்களால் அடைக்கப்பட்ட பள்ளிகளில், இயற்கையை பற்றி எந்தளவிற்கு கற்றுத்தரப்படுகிறது என்பது, கேள்விகுறிதான். ஒரு பள்ளி மாணவியிடம் சென்று ‘சூப்பர் மார்க்கெட்டிற்கு பால் எங்கிருந்து வருகிறது?’ என்று கேள்வி எழுப்பினால், அவளால் பதிலுரைக்க இயலாது. ஏனெனில், தற்கால கல்விமுறையே ஒரு குறுகிய வட்டத்தில்தான் அடைந்துகிடக்கிறது. ‘ரெனாட்டோ’ அவர்கள் தான் ‘மிலன்’ நகரின் ‘கடைசி மேய்ப்பாளன்’ ஆவார்.

ஆகவே, தன் ஆடுகளை பற்றியும், தன் மேய்ப்பு தொழில் பற்றியும், இளந்தலைமுறையினருக்கு அறிவிக்க ஒரு திட்டம் தீட்டுகிறார். பல நாட்கள் நடைபயணமாக தன் கால்நடைகளோடு, ‘மிலன்’ நகரம் வந்துசேர்கிறார். அவரின் கால்நடையில் ஆடுகள் மட்டுமல்ல.

பயணத்தினை எளிமையாக்கும் வகையில் ஒருசில குதிரைகளும், வேட்டை நாயும், கழுதைகளும் அடக்கம். கூடவே, மேய்ப்பிற்கு உதவியாக வயதான சில நண்பர்களையும் அழைத்து செல்கிறார்.

கிடைத்த இடத்தில் உறங்கிவிட்டு, கிடைத்ததை உண்டுவிட்டு அவர்களின் பயணம் இனிதே தொடங்குகிறது. ‘ரெனாட்டோ’ போன்ற உடல் பருமனான, வயதான ஒரு மனிதன், இவ்வளவு சுறுசுறுப்பாக செயல்படுவானா ? என்று சிந்திக்கும்போதே ஆச்சர்யம் மேலோங்குகிறது.

அவரின் எளிமையான பேச்சும்,சிரித்த முகத்துடனான அவரின் அனுகல்களும், நம்மை பூரிப்படைய செய்கின்றன. படத்தின் இயக்குநர், அவரின் கனவை நிறைவேற்ற உதவுகிறார்.

பள்ளிகளிலிருந்து மாணவர்கள் ஒரேயடியாக வெளியேறி, மிலன் நகரத்தில் கூடுகின்றனர். பெரியவர்களும், சிறியவர்களும், கலைஞர்களும், பணியாளர்களும், என்று பலதரப்பட்ட மக்களிடையே, தன்னுடைய 700 ஆடுகளை ஒரே இடத்தில் குவிக்கிறார் ‘ரெனாட்டோ’.

‘இயற்கைக்கும், நவீனத்திற்கும்’ இடையில் கிழிக்கப்பட்ட வெற்றுக் கோட்டினை, ‘ரெனாட்னோ’ தன் விபரீதமான நகைச்சுவை கனவின் மூலம் சாதித்துக்காட்டிவிட்டார். அடுத்த தலைமுறை அவரின் இந்த செயலை வெறுமனே வேடிக்கையாக எடுத்துக்கொள்ளாமல், இயற்கையின் பிணைப்பாக எடுத்துக்கொள்ளும்படி வேண்டிக்கொள்கிறார்.

Movie Details

Name: The Last Shepard

Original Name: l’ultimo pastore

Year: 2012

Runtime: 76 mins

Language: Italian

Country: Italy

Director: Marco Bonfanti

The Biggest Little Farm (2018)

அமேரிக்காவில் இயற்கைமுறையிலான பண்ணைகள் அமைப்பதென்பது அவ்வளவு சாதாரணமான விடையமல்ல. ஏனெனில், 80% மேலான உணவுச்சந்தையை, தனியார் நிறுவனங்களே ஆக்கிரமித்திருக்கும் நிலையில், விவசாய நிலங்களையும் பெருநிருவனங்களே கையகப்படுத்தி வருகின்றனர்.

ஒரு விவசாய நிலத்தில் என்னென்ன பயிரிடவேண்டும்! என்பதில் தொடங்கி, கால்நடை பண்ணைகளை பராமரிப்பது வரை, அத்தனை பெரிய அமைப்பையும் பெருநிறுவனங்களே தீர்மானிக்கின்றன.

இந்த மீளமுடியாத ஆக்கிரமிப்பிலிருந்து விலகி, சுயாதீனமான பண்ணை ஒன்றினை உருவாக்க எண்ணுகிறது, ஒரு குடும்பம். மேற்கூறிய இரு ஆவணப்படங்களிலிருந்து இது சற்றே வித்தியாசமானது. புதிதான பண்ணையை உருவாக்குபவர்களுக்காகவும், இயற்கையின் சங்கிலி பிணைப்பை உணர்ந்து, மரபுவழி தோட்டங்களை அமைப்பதற்காகவும், இக்குடும்பம் அதிக மெனக்கெடலை செய்துவருகிறது.

கடந்த 7 வருடகால இவர்களின் பயணத்தில், பல்வேறான வெற்றித் தோல்விகள் அடக்கம். சுமார் 7 வருடகாலமான அவர்களின் அற்புதமான பயணத்தை விவரிக்கிறது, இந்த ஆவணப்படம். ஏற்கனவே, இயற்கை வேளாண்மை குறித்து அவர்கள் அறிந்திருந்தபோதும், பல தோல்விகளை ஆரம்பத்தில் சந்திக்கவேண்டியிருந்த்து.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு வெளியே, சுமார் 200 ஏக்கர் இயற்க்கை முறையிலான பண்ணையை உருவாக்குவதென்பது, அசாத்தியமான செயல். முதலில் தம்பதியர்கள், தங்களின் நிலத்தை விரிவுபடுத்துவதற்காக, அண்டை நபர்களிடம் குத்தகைக்குப் பெற்றுக்கொள்கின்றனர். பின், அதில் ஏராளமான தாவரங்களையும், விலங்குகளையும் வளர்க்கின்றனர்.

நாளடைவில் இதுவொரு இயற்கை பிணைப்புள்ள பண்ணையாக மாறிவிடுகிறது. தாவரங்களுக்கு பூச்சிகளால் (வெட்டுக்கிளி) வரும் பாதிப்புகளை கலைய, வாத்துகள் வந்து சேர்ந்தன. தாவரங்களின் ஊட்டச்சத்திற்காக, கால்நடை கழிவுகள் பயன்படுத்தப்பட்டன. நரிகளால் வரும் ஆபத்துகளை கலைய நாய்கள் வளர்க்கப்பட்டன.

கால்நடை தீவனங்களின் மிச்ச தீவனங்களை பதம்பார்க்க, பன்றிகள் வளர்க்கப்பட்டன. நாளடைவில் பல்வேறுவிதமான பறவைகளும், இந்த இயற்கை தோட்டத்திற்கு வருகைதந்த வண்ணம் உள்ளன. அந்நிய விருந்தாளிகள் (பறவைகள்) மட்டுமின்றி, ஏராளமான பொதுமக்களும் இத்தோட்டத்தை காண வருகை தருகின்றனர்.

இளம்தலைமுறை தோட்டப்பிரியர்களுக்கு, இதுவொரு நல்ல பாடமாக அமைகிறது. தற்பொழுது அக்கம்பக்கத்து பொதுமக்களும், தங்களின் புன்செய் நிலங்களை குத்தகைக்குவிட தயாராக உள்ளனர். இதுவொரு நல்ல துவக்கம்.

Movie Details

Name: The Biggest Little Farm

Year: 2018

Runtime: 92 mins

Language: English

Country: USA

Director: John chester

இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள 3 ஆவணப்படங்களும், ஒளிப்பதிவிலும், காட்சியமைப்பிலும் நேர்த்தி மிக்கவை. ஒவ்வொன்றையும் படமாக்க பல ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன.

இப்படங்கள் யாவும், இயற்கையை மறுதலித்து, நவீனத்தின் ருசியறிய வெளியேற நினைக்கும் சக மனிதனுக்கு பாடமாக அமையுமென்பதில் ஆச்சர்யமில்லை.

செம்மறியாடுகள் மேய்ப்பதை அநாகரீகமாக கருதும் மனிதர்கள், நவீனத்தின் பின்னால் செம்மறியாடுகளாய் படையெடுத்து வருகின்றனர்!